Published : 29 Oct 2021 03:12 AM
Last Updated : 29 Oct 2021 03:12 AM

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு பதிவு ஆய்வு கூட்டம் :

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு குறித்த ஆய்வுக் கூட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் தேவசேனாபதி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் தேவசேனாபதி பேசியது:

குழந்தைகளின் பெயரை பதிவு செய்வது பெற்றோரின் கடமை. பெயர் பதிவு இல்லா சான்றிதழ்கள் உபயோகமற்றது என்பதால் பிற்காலத்தில் வரும் இடர்பாடுகளைக் களைய பிறப்பு பதிவில் பெயர் பதிவு செய்யாத அனைவரும் சம்பந்தப்பட்ட பதிவாளரை அணுகி பெயர் பதிவு மேற்கொள்ள வேண்டும். பிறப்பு பதிவு செய்த நாளிலிருந்து 12 மாதங்கள் வரை கட்டணமின்றி குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம். 12 மாதத்திற்கு பின்னர் 15 ஆண்டுகள் வரை தாமதக் கட்டணம் ரூ.200 செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம்.

குழந்தையின் பெயரை பதிவு செய்திட பெற்றோர் மற்றும் காப்பாளரின் உறுதிமொழி கட்டாயமாகும். பெயர் பதிவு செய்திட கால அவகாசம் முடிவுற்ற அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் தற்போது 31.12.2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், உரிய கால தாமதக் கட்டணம் செலுத்தி பெயர் பதிவு செய்து பிறப்பு சான்றிதழ் பெறலாம். 01.01.2018-க்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளுக்கான சான்றிதழ்களை crstn.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கரோனா இறப்பு சான்றிதழ்

கரோனா நோயில் இறந்தவர்கள் இறப்பின் காரணம் குறித்த சான்றிதழ்கள் பெறுவதில் சிரமம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு தற்பொழுது சான்றிதழ் வழங்கும் நடைமுறைகளை முறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, சேலம் மாவட்டத்தில் கரோனா இறப்பின் காரணம் குறித்த நிர்ணயக் குழு மாவட்ட ஆட்சியர் நியமித்துள்ளார். பரிசோதனை மூலம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ இறக்க நேரிட்டால் அது கரோனா தொற்றால் இறந்ததாக கருதப்படும். பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து மருத்துவமனையில் உள்நோயாளியாக தொடர்ந்து 30 நாட்களுக்கு மேலாக இருக்கும் பட்சத்தில் 30 நாட்களுக்கு மேற்பட்ட இறப்புகளும் கரோனா தொற்று இறப்பாக கருதப்படும். இந்த காரணங்களால் இறந்து, இறப்பின் காரணம் குறித்த சான்றிதழ் பெற இயலாத நிலையில் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து குழுவின் பரிந்துரையின் பேரில் இறப்பின் காரணம் குறித்த அரசு ஆவணம் பெறலாம். இதர காரணங்களினால் இறக்க நேரிட்டால் அது கரோனா தொற்றால் ஏற்பட்ட இறப்பாக ஏற்றுக்கொள்ள இயலாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலக துணை இயக்குநர் சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x