Published : 16 Oct 2021 06:14 AM
Last Updated : 16 Oct 2021 06:14 AM

மத்திய அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி - தஞ்சாவூரில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம் :

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உரிய நீதி வழங்க வலியுறுத்தியும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலகக் கோரியும் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தோமர், யோகி ஆதித்யநாத் ஆகியோரது உருவப் பொம்மை எரிப்பு போராட்டம் நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது.

அதன்படி, தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், விவசாய தொழிவாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாலதி, என்.சுரேஷ்குமார், விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு காளியப்பன், கோ.திருநாவுக்கரசு, சு.பழனிராஜன், ராவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி அரியமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பின் பாலமுருகன், மக்கள் உரிமைக் கூட்டணியின் ஜோசப், காசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய ஐக்கிய முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.சி.சோமையா தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன், செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாகை அவுரித் திடலில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பாபுஜி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், பிரதமரின் உருவபொம்மையை எரிக்க முயன்றபோது, போலீஸார் தடுத்து நிறுத்தி உருவபொம்மையை பறித்தனர். இதனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கோ.ராஜசேகர் தலைமை வகித்தார். சுயஆட்சி இந்தியா தேசிய தலைவர் கிறிஸ்டினா, மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், ஏஐசிசிடியு ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், உருவ பொம்மையை எரிக்க முயன்ற 22 பேரை போலீஸார் கைது செய்து, பிற்பகலில் விடுவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x