கடன் வழங்கும் தொழிலுக்கு உரிமம் அவசியம் - அதிக வட்டி வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை : தஞ்சாவூர் எஸ்.பி ரவளிப்பிரியா எச்சரிக்கை

கடன் வழங்கும் தொழிலுக்கு உரிமம் அவசியம் -  அதிக வட்டி வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை :  தஞ்சாவூர் எஸ்.பி ரவளிப்பிரியா எச்சரிக்கை
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடனுக்கு அதிக வட்டி வசூலிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எஸ்.பி ரவளிப்ரியா தெரிவித்தார்.

தஞ்சாவூர் காவலர் பயிற்சி வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கந்துவட்டி தடுப்புச் சட்டம் 2003 குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பேசியது:

வியாபார நோக்கில் ஆண்டுக்கு 18 சதவீதத்துக்கு அதிகமாகவும், தனி உபயோகத்துக்காக 12 சதவீதத்துக்கு அதிகமாகவும் வட்டி வசூலித்தால் குற்றமாகும். அதீத வட்டி வசூலிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.30,000 வரை அபராதமும் விதிக்கப்படும். வட்டிக்காரர்களுக்கு எதிரான புகார்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவியல் நீதிமன்றங்களை அணுகினால், அதில் தொடர்புடையவர் 15 நாட்களில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்படும். கடன் பெற்றவர் செலுத்த வேண்டிய தொகையை அதற்கான அனுமதிக்கப்பட்ட வட்டியுடன் நீதிமன்றத்தில் செலுத்தினால் போதும். கடன் பெற்றவரின் அசையும், அசையா சொத்துகளை வசூலிப்பவர் கையகப்படுத்தியிருந்தால், அவற்றையும் நீதிமன்றம் மீட்டுக் கொடுக்கும்.

கடன் அளிக்கும் தொழில் செய்ய விரும்பும் நபர் தொடர்புடைய வட்டாட்சியரிடம் பதிவுசெய்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். கந்து வட்டி பிரச்சினையால் யாராவது தற்கொலை செய்ய நேர்ந்தால், தற்கொலைக்குத் தூண்டியதாக வட்டிக்குப் பணம் கொடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றார். பின்னர், கந்து வட்டி வசூலிப்பதற்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் எஸ்.பிக்கள் வி.ஜெயச்சந்திரன் (தலைமையிடம்), கென்னடி(சைபர் கிரைம்), ரவீந்திரன்(பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு), நகர டிஎஸ்பி கே.கபிலன், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in