Published : 18 Sep 2021 03:14 AM
Last Updated : 18 Sep 2021 03:14 AM

143-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு - பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை :

பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அவரது சிலைகளுக்கு தி.க, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் நேற்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியாரின் சிலைக்கு திமுக சார்பில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் மாநகரச் செயலாளர் அன்பழகன், எம்எல்ஏக்கள் காடுவெட்டி ந.தியாகராஜன், ஸ்டாலின்குமார், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், காட்டூரிலுள்ள பெரியார் சிலைக்கு முன்னாள் எம்.பி ப.குமார் தலைமையிலும், மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் குழுமணியில் பெரியார் படத்துக்கு முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், வளர்மதி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்டத் தலைவர் ஜவகர், அமமுக சார்பில் முன்னாள் கொறடா ஆர்.மனோகர், திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ், மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, சேரன், மணவை தமிழ்மாணிக்கம், தேமுதிக சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் கணேஷ் ஆகியோர் தலைமையிலும் மற்றும் விசிக, இந்திய கம்யூனிஸ்ட், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்ப்புலிகள், ஆதித்தமிழர் பேரவை, மகஇக, மருதம் மக்கள் முன்னேற்றக் கழகம் உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பிலும், பெரியார் மணியம்மை கல்வி நிறுவனங்கள் சார்பிலும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியாரின் சிலைக்கு தி.க. சார்பில் மாவட்டத் தலைவர் அமர்சிங், திமுக சார்பில் எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உள்ளிட்டோரும், கும்பகோணம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியாரின் சிலைக்கு திமுக மாவட்டச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம் தலைமையில், மயிலாடுதுறை எம்.பி செ.ராமலிங்கம் முன்னிலையில், அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து, சமூக நல்லிணக்க உறுதிமொழியேற்றனர்.

திருவாரூரில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு, திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி.கலைவாணன் எம்எல்ஏ தலைமையில், தி.க மாவட்டத் தலைவர் மோகன் உள்ளிட்டோரும், மன்னார்குடி மேல ராஜவீதி பெரியார் சிலைக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, தி.க மாவட்டத் தலைவர் ஆர்.பி.சித்தார்த்தன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து, சமூக நீதிநாள் உறுதிமொழியேற்றனர். இதேபோல, அதிமுக சார்பில் பெரியாரின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பெரியாரின் சிலைக்கு புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியர்(பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு தி.க சார்பில் மண்டலத் தலைவர் கோவிந்தராஜன், திமுக சார்பில் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அதிமுக சார்பில் நகரச் செயலாளர் செந்தில் உள்ளிட்டோரும், ஜெயங்கொண்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு எம்எல்ஏ க.சொ.க.கண்ணனும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு திமுக சார்பில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமையில், எம்எல்ஏ பிரபாகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, சமூக நீதிநாள் உறுதிமொழியேற்றனர்.

கரூர் திருமாநிலையூர் பெரியார் சிலைக்கு திமுக சார்பில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், க.சிவகாமசுந்தரி, ஆர்.இளங்கோ, மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்டோரும், தி.க சார்பில் மாவட்டத் தலைவர் குமாரசாமி, செயலாளர் காளிமுத்து உள்ளிட்டோரும் மாலை அணிவித்தனர்.

இதேபோல, மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தி.க, திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் பெரியாரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x