சிறுதானியம் பதப்படுத்தும் மையம் அமைக்க நடவடிக்கை : பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புக்கு கோத்தகிரி பழங்குடியினர் வரவேற்பு

சிறுதானியம் பதப்படுத்தும் மையம் அமைக்க நடவடிக்கை :  பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புக்கு கோத்தகிரி பழங்குடியினர் வரவேற்பு
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களால் உற்பத்தி செய்யப்படும் சிறு தானியங்களை பதப்படுத்த கோத்தகிரியில் மையம் அமைக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது பழங்குடி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இருளர், குறும்பர், பனியர், தோடர், கோத்தர், காட்டுநாயக்கர் ஆகிய 6 பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சாமை, வரகு போன்ற சிறுதானிய வகைகளை இயற்கையாக விளைவித்து பயன்படுத்தி வந்தனர். தோட்டப் பயிர்கள் அறிமுகம் செய்த பிறகு, சிறுதானிய சாகுபடி பரப்பளவு வெகுவாகக் குறைந்தது.

இதையடுத்து பாரம்பரிய சிறுதானிய சாகுபடியை மீட்டெடுக்கும் முயற்சியில் பழங்குடியின மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கோத்தகிரியில் சிறுதானியம் பதப்படுத்தும் மையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நம் சந்தை உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சண்முகநாதன் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் சிறுதானியங்களை பதப்படுத்தி சந்தைப்படுத்துவதில் சிக்கல் இருந்து வருகிறது. இதை பயன்படுத்தி, சிறுதானியங்களை மிகக்குறைந்த விலைக்கு வாங்கிச் சென்று, வெளிச்சந்தையில் கொள்ளை லாபத்துக்கு சிலர் விற்பனை செய்து வருகின்றனர். பட்ஜெட்டில், கோத்தகிரியில் சிறுதானியம் பதப்படுத்தும் மையம் அமைப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், பழங்குடிகள் பயன்பெறுவதோடு, சிறுதானியங்களை அழிவில் இருந்து காக்கமுடியும். சிறு தானிய சாகுபடி பரப்பு அதிகரிக்கும்.

இதேபோல, பெட்டட்டி சுங்கத்தில் காய்கறி ஏல மையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுநாள்வரை நீலகிரி மாவட்ட விவசாயிகள், தங்கள் காய்கறிகளை மேட்டுப்பாளையம் சென்று விற்பனை செய்து வந்தனர். அங்கு, ஏல நேரத்துக்கு செல்ல முடியாவிட்டால் குளிரூட்டப்பட்ட அறைகளில் காய்கறிகளை வைக்க வேண்டும். காய்கறிகளின் தரம் பாதிக்கப்பட்டு, விலை குறையும். இதனால், பணம் மற்றும் காலவிரயம் ஏற்பட்டு வந்தது. பெட்டட்டி சுங்கத்தில் ஏல மையம் அமைவதால், இப்பிரச்சினைகள் களையப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in