போலி கால்நடை மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை : கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

போலி கால்நடை மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை :  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி கால்நடை மருத்துவர்கள் கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில இடங்களில் சினை ஊசி போடுவதற்கு செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் போலியாக கால்நடை மருத்துவர் என கூறி மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இது முற்றிலும் தவறு. கால்நடைகளுக்கு ‘கால்நடை மருத்துவப்பேரவை' எனப்படும் வெட்னரி கவுன்சிலில் பதிவு பெற்ற, கால்நடை மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க அங்கீகாரம் உண்டு. இதனை மீறி போலி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதும், அவர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதும் தவறான செயல்.

போலி நபர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் குறைபாடு, இழப்பீடுகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது. செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு மட்டும் 3 மாத காலம் பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு கால்நடைகளுக்கு வரும் நோய்கள், சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய மருந்துகள் குறித்த பயிற்சி எதுவும் கிடையாது என்பதால் அவர்கள் கருவூட்டல் பணி மட்டுமே செய்ய தகுதி உள்ளவர்கள்.

எனவே, கால்நடைகளுக்கான சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட (பதிவு பெற்ற) மருத்துவர்களை மட்டுமே பொதுமக்கள் அணுக வேண்டும். போலி மருத்துவர்கள் குறித்த தகவலை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். போலி கால்நடை மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் முதல் முறை ரூ.1000, 2-வது முறை ரூ.1000 அபராதம் அல்லது 6 மாத கடுங்காவல் சிறை தண்டனை அல்லது 2-ம் சேர்த்து வழங்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in