Published : 26 May 2021 03:15 AM
Last Updated : 26 May 2021 03:15 AM
கரோனா தொற்றாளர்கள் தினமும் மூலிகைத் தாம்பூலம் பயன்படுத்தி வந்தால் சுவாசப் பாதை சீராகும் என புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.உம்மல் கதீஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: வெற்றிலை-2, கிராம்பு-2, தாளிசாதி வடகம்-1, ஓமம்- 1/4 ஸ்பூன் ஆகியவற்றுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து மூலிகைத் தாம்பூலம் தயாரிக்கப்படுகிறது.
வெற்றிலையில் ஹைட்ராக்ஸி சாவிகோல் என்ற பயோட்டோ கெமிக்கல் உள்ளது. இது ஆன்டி ஆக்சிடன்ட் ஆக செயல்படக்கூடியது. மேலும், பசியை தூண்டக் கூடியதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதை சீராக்குவதற்கும் பயன்படுகிறது .
மேலும், இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளை பலப்படுத்தக் கூடியதாகவும், உடலில் உள்ள வலியைப் போக்கி நன்றாகப் பசியைத் தூண்டக் கூடியதாகவும் இருக்கும்.
ரத்த தட்டு அணுக்கள் குறைவதை தடுக்கக் கூடியதாகவும், ரத்தம் உறைவதை தடுக்கக் கூடியதாகவும், பூஞ்சை நோய்க்கு எதிராக செயல்படக் கூடியதாகவும் இருக்கும்.
அதில் சேர்க்கும் கிராம்பானது, மிகுந்த காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை உடையது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவோருக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும், பல்வேறு வகையான நோய் கிருமிகளின் பாதிப்பிலிருந்து காக்கும்.
இவற்றுடன் சித்த மருந்தான தாளிசாதி வடகம் வைத்து தாம்பூலமாக பயன்படுத்தும்போது உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு அஜீரணம், நுரையீரல் பாதிப்பு உண்டாகாமலும், உடல் வலி இல்லாமலும் காக்கிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு கரோனா தொற்றாளர்களுக்கு இந்த மூலிகை தாம்பூலத்தை வழங்கி வருகிறோம்.
இதனால், அவர்களுக்கு நுரையீரல் தொற்று அதிகமாக ஏற்படாமல் தடுத்து, ஆக்சிஜன் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும், உடல் வலியைப் போக்கி நோய்த் தொற்றில் இருந்து விரைவில் குணமடைய உதவுகிறது என்றார்.
இதை, சித்த மருத்துவர்கள் தாமரைச்செல்வன், வேங்கடகிருஷ்ணன், செந்தில் ஆகியோர் கொண்ட குழுவினர் புதுக்கோட்டை சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் தினசரி தயாரித்து வழங்கி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT