நிவாரண உதவித்தொகை பெறுவதில் சிக்கல் இருந்தால் புகார் செய்யலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்

நிவாரண உதவித்தொகை பெறுவதில் சிக்கல் இருந்தால் புகார் செய்யலாம்  :  மாவட்ட ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

கரோனா நிவாரண உதவித்தொகை பெறுவதில் சிக்கல் இருந்தால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கலாம், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா நிவாரண உதவித் தொகை ரேஷன் கடை மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், முதல் தவணையாக வரும் 15-ம் தேதி முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

மேலும், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்கப்பட்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள், நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று உதவித்தொகை பெற்றுக் கொள்ளலாம்.

இதற்காக ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டும் செயல்படும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் கரோனா நிவாரண உதவித் தொகை முதல் தவணை வழங்கப்படும்.

குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி உதவித் தொகை பெற வேண்டும். உதவித் தொகை முதல் தவணை பெறுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுபாட்டு அறைக்கு 04286-281116 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in