

ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் செயல்பாட்டுகுழு அமைப்பாளர் இராம. உதயசூரியன் தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:
ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம் நிறைவேற நிலம் கையகபடுத்தும் வகைக்கான நில உரிமையாளர்கள் சந்திப்பு கூட்டம் ஆவுடையானூரில் கடந்த ஜனவரி 5-ம் தேதி நடைபெற்றது. நில உரிமையாளர்களின் நிலஉடமை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இழப்பீடு தொகை வழங்கஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் தேர்தல் மற்றும் பல்வேறுகாரணங்களால் தொடர் நடவடிக்கைகள் சாத்தியமில்லாமல் போயிற்று. தற்போது தேர்தல்முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதால் இந்த கால்வாய்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
கால்வாய் வெட்டும் பணிக்கான நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னரும் வனத்துறையின் தடையில்லா சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் பணி தொடங்கப்படவில்லை.
ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டாகியும் ஓப்பந்ததாரரால் பணியை தொடங்க முடியவில்லை. வனத்துறையின் திருநெல்வேலி அலுவலகத்தின் மூலம் பொதுப்பணித்துறையின் மனு சென்னைஅலுவலகத்துக்கு அனுப்பப்பட்டால்தான், வனத்துறையின் தடையில்லாசான்று கிடைக்கும் நிலை உள்ளது. எனவே அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
பருமழை தொடங்குமுன் கால்வாய் வெட்டும் பணியைத்தொடங்கினால்தான் விவசாயத்துக்கு தண்ணீரை கொண்டுவர முடியும். எனவே, நிலம் கையகப்படுத்தவும், கால்வாய் வெட்ட வனத்துறையின் அனுமதி கிடைக்கவும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.