

தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் தொலைதூரங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் காலை அமுது திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழமையான இப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் பேர் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு பள்ளியிலேயே இலவசமாக காலை உணவு வழங்கும் வகையில் ‘இறையடியார் சூசைநாதர் காலை அமுதுதிட்டம்' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத் தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி இத்திட்டத்தை தொடங்கி வைத்து ஆசி வழங்கினார்.
விழாவில் பள்ளியில் வாசகர் வட்டமும் தொடங்கப்பட்டது. பள்ளித் தாளாளர் அருட்தந்தை இஞ்ஞாசி முன்னிலை வகித்தார்.தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
முன்னாள் மாணவர் இயக்கத் தலைவர் ஹெர்மென் கில்டு, பொருளாளர் ஹாட்மென் மற்றும் முகமது கயாஸ், சங்கரன், பாபு ஆகியோர் பங்கேற்றனர்.
ஆசிரியர்கள் அண்டோ, ஜோஅந்தோணி ஆகியோர் இறையடியார் சூசைநாதர் பற்றியும், வாசகர் வட்டம் பற்றியும் எடுத்துக் கூறினர். உதவி தலைமையாசிரியர் யூஜின் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். ஆசிரியர்கள், மாண வர்கள் கலந்து கொண்டனர்.