திருத்துறைப்பூண்டி வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் புதர்களை அகற்ற கோரிக்கை

திருத்துறைப்பூண்டி வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் புதர்களை அகற்ற கோரிக்கை

Published on

வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்கெட்டிங் கமிட்டி வளாகத்தில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. இங்கு வேளாண்மை விரிவாக்க மையம், மார்க்கெட்டிங் கமிட்டி குடோன் ஆகியவையும் உள்ளன. விவசாயிகள், பொதுமக்கள் காய், கனி, உரம், நெல் விதை வாங்கவும், ஆலோசனை பெறுவதற்கும் இந்த வளாகத்துக்கு வந்து செல்கின்றனர்.

உரிய பராமரிப்பு இல்லாததால் இங்குள்ள அனைத்து கட்டிடங்களை சுற்றியும் சீமைக் கருவேல மரங்கள், கோரைப்புற்கள், விஷச் செடிகள் அதிகம் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது.

இங்கு பாம்புகள் உள்ளிட்ட விஷஜந்துகள் நடமாட்டம் அதிகம் உள்ளன. இதனால் விவசாயிகளும், நுகர்வோரும், காய்கறி வியாபாரிகளும். உயிர் பயத்தில் இந்த வளாகத்துக்குள் வர அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆட்சியர் உடனடியாக, திருத்துறைப்பூண்டி வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் உள்ள புதர்களை அகற்றி, விஷ ஜந்துகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் ஆர்.நாகராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in