Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

தஞ்சாவூர், நாகை, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

தஞ்சாவூர், நாகை, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

கரோனா தொற்றுக் காலத்தில் முன்களப் போராளிகளாக பணி யாற்றிய மருத்துவத் துறையினரை உற்சாகப்படுத்தும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் வி.சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார்.

டாக்டர்கள் பொன்.அறி வானந்தம், எம்.தீபா, பாலமுருகன், ஆர்.ரஞ்சித், ஆர்.சரண்யா, ஆர்.சங்கர் பாபு, கே.கோகிலா, வேம்பிரதியா, இ.வெங்கடேஷ், கே.வெங்கடேஷ், எம்.நந்தகுமார் மற்றும் செவிலியர்கள், சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், டெக்னீஷியன்கள், ஆய்வக உதவியாளர்கள், மருந்தாளுநர், தூய்மைப் பணியாளர் கள், தற்காலிகப் பணியாளர்கள் உட்பட 110 பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், பானை உடைத்தல், இசை நாற்காலி, ஓட்டப்பந்தயம், பாட்டுப் போட்டி, கோலப்போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ்ப் பல்கலை.யில்...

தஞ்சாவூர் தமிழ்ப் பல்க லைக் கழகத்தில் துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்பிர மணியன் தலைமையில், அரசு வழிகாட்டுதலின்படி தனி மனித இடைவெளியைப் பின்பற்றி எளிய முறையில் தைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சியில் பதிவாளர்(பொறுப்பு) முனைவர் கு.சின்னப்பன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், நிதி அலுவலர், துணைப் பதிவாளர், அலுவலர்கள், பணி யாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தைப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நாகை ஆயுதப்படை வளாகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. விழாவில், மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையில், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களும், 300-க்கும் மேற்பட்ட ஆயுதப்படைக் காவலர்களும் கலந்துகொண்டனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா பொங்கல் வைத்து, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கினார். விழாவில், உதவி காவல் கண்காணிப்பாளர் ரஜாட் சதுர்வேதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகேஷ், துணை கண்காணிப்பாளர் முருகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வடக்குவெளியில் இந்து மக்கள் கட்சி சார்பில், இந்து சமுதாய ஒருங்கிணைப்பு பொங்கல் விழா மாநிலச் செயலாளர் கொள்ளிடம் ஜெ.சாமிநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது. காகபுஜண்டர் சித்தர் குடில் சந்திரசேகர் சுவாமிகள், ஜன புனிதம் யோக அறக்கட்டளை நிறுவனர் ஜன புனிதர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில், கிராம மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், கரும்பு, தேங்காய், இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பரிசுப் பொருட்களை சட்டநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் தட்சிணாமூர்த்தி வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத் துறை சார்பில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு ஆட்சியர் த.ரத்னா தலைமை வகித்தார். விழாவை அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். விழாவில் தப்பாட்டம், கரகாட்டம், காளையாட்டம், பரதநாட்டியம், கலைநிகழ்ச்சிகள், கோலப்போட்டி, உறியடி, இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகளும், மாட்டுவண்டி ஊர்வலமும் நடை பெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் 3 கலைஞர்களுக்கு மதிப்பூதியமாக தலா ரூ.30,000 வீதம் ரூ.90,000-க்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், மண்டல உதவி இயக்குநர்(கலை பண்பாட்டுத் துறை) ஹேமநாதன், மாவட்ட சுற்றுலா அலுவலர்(பொ) ஜெ.ஜெயக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலு வலகத்தில் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் நேற்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவுக்கு, ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். மண் பானைகளில் பொங்கலிட்டு விழா கொண்டாடப்பட்டது. சுற்றுலாத் துறையின் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், சுற்றுலா அலுவலர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x