

தமிழகம் முழுவதும் தமிழில் பெயர்ப் பலகையை வைக்குமாறு வணிகர்கள் 25,000 பேரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்சிமொழி சட்ட வார நிறைவு விழாவில் பங்கேற்ற அவர் பேசியது:
தமிழ் மொழியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் அமைப்புகளுக்கு உள்ளது.
தமிழ்ப் பண்பாடு குறித்து மேடை முழுவதும் முழங்க வேண்டும். தமிழன் தனது உடையான வேட்டியை அணிய வேண்டும். கூட்டங்கள் நடைபெறும்போது, வேட்டியில்தான் வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். உணவு, உடை, பழக்கவழக்கங்களை மீட்டெடுக்க வேண்டிய பணியை தமிழ் அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆட்சிமொழி சட்ட வார விழாவையொட்டி, ஒரு வாரமாக வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைக்குமாறு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் கடந்த 7 நாட்களில் ஏறத்தாழ 25,000 கடைகளின் உரிமையாளர்களைச் சந்தித்து தமிழில் பெயர்ப் பலகை வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். பலர், உடனடியாக தமிழில் பெயர்ப் பலகையை வைத்துவிட்டனர் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கலை, பண்பாட்டுத் துறை முன்னாள் இணை இயக்குநர் இரா.குணசேகரன், மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன ஆய்வறிஞர் க.பசும்பொன், முனைவர் ஆதி.நெடுஞ்செழியன், மாவட்ட நூலக ஆய்வாளர் காரல்மார்க்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.