Published : 24 Dec 2020 07:23 AM
Last Updated : 24 Dec 2020 07:23 AM

எரிவாயு பற்றாக்குறையால் உற்பத்தி பாதிப்பு திருமக்கோட்டை மின் உற்பத்தி நிலையம் மூடப்படும் அபாயம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருமக்கோட்டை எரிவாயு சுழலி மின் உற்பத்தி நிலையத்துக்கு போதுமான எரிவாயு கிடைக்காததால் மின் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், இந்நிலையம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மன்னார்குடி அருகே திருமக்கோட்டையில் எரிவாயு சுழலி மின் உற்பத்தி நிலையம் கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 107 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனுடன் தொடங்கப்பட்ட இந்த மின் உற்பத்தி நிலையம், கடந்த ஓராண்டாக கடுமையான உற்பத்தி சரிவை சந்தித்து வருகிறது. தற்போது இங்கு 20 மெகாவாட் என்ற அளவுக்கே மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த மின் உற்பத்தி நிலையத்துக்கு, 14 கி.மீ தொலைவில் உள்ள கோவில்களப்பால் கிராமத்தில் உள்ள ஓஎன்ஜிசி எரிவாயு உற்பத்தி நிலையத்திலிருந்து குழாய் பதித்து எரிவாயு கொண்டு வரப்படுகிறது. தற்போது அந்த உற்பத்தி நிலையங்களில் எரிவாயு உற்பத்தி குறைந்துவிட்டதால், போதுமான எரிவாயு கிடைக்காமல் மின் உற்பத்தியும் குறைந்துவிட்டது. இதனால் இந்த மின் உற்பத்தி நிலையமே மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இங்கு பணியாற் றும் தொழிலாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக, ஓஎன்ஜிசி தரப்பில் விசாரித்தபோது, ‘‘கோவில் களப்பால் கிராமத்தில் எரிவாயு உற்பத்தி சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அடியக்கமங்கலத்திலிருந்து எரிவாயு எடுத்து பயன்படுத்தலாம். ஆனால், எரிவாயு கொண்டு வருவதற்கான குழாய் பதிப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், மின் உற்பத்தி எரிவாயு நிலையத்துக்கு, எரிவாயு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

இதுகுறித்து மன்னார்குடி நுகர்வோர் அமைப்பு இணைச் செயலாளர் ஆசிரியர் இளங்கோவன் கூறியது:

திருமக்கோட்டை எரிவாயு சுழலி மின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், மன்னார்குடி, உள்ளிக்கோட்டை முக்குளம் சாத்தனூர், திருவாரூர், பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு, அதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்த மின் உற்பத்தி நிலையத்துக்கு எரிவாயு கிடைக்காவிட்டால், இந்த நிலையம் மூடப்படும் நிலை உள்ளது. அவ்வாறு மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டால், இங்கு பணியாற்றும் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பர்.

மேலும், இந்தப் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் ஏற்படவும், விவசாய பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மும்முனை மின்சாரத்தில் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக இந்த மின் உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டு, முழு உற்பத்தி திறனுடன் இயங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x