Published : 15 Dec 2021 03:09 AM
Last Updated : 15 Dec 2021 03:09 AM

ஏற்காட்டில் தாய், மகனை கடத்தி தாக்கிய வழக்கில் - மேட்டூர் நீதிமன்ற ஊழியர் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை :

சேலம்

ஏற்காடு மேல் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி வசந்தி (70). இவர்களது மகன் அசோக்குமார். இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது தாயாரின் பெயரில் உள்ள நிலத்தை, மேட்டூர் நீதிமன்றத்தில் பணிபுரியும் ஏற்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் அடமானம் வைத்து ரூ.1.50 லட்சம் கடன் பெற்றார். பின்னர் அதை செலுத்தியுள்ளார்.

இதையடுத்து, வசந்தி அவரது நிலத்தை வேறு ஒருவருக்கு விற்று உள்ளார். இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி “நிலத்தின் அசல் ஆவணம் தன்னிடம் உள்ளது என்றும், எப்படி நிலத்தை மற்றவருக்கு விற்கலாம்” எனக் கூறி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் வசந்தி மற்றும் அசோக்குமாரை கடத்திச் சென்று தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பிய வசந்தி மற்றும் அசோக்குமார் இதுதொடர்பாக ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீஸார், கிருஷ்ணமூர்த்தி, ஓமலூர் அடுத்த கோட்ட கவுண்டம்பட்டி கலைவாணன் (33), வெள்ளாளப்பட்டி சக்தி (42), காமலாபுரம் விமான நிலையம் பகுதி ராஜா (31), கஞ்சநாயக்கன்பட்டி சுபாஷ் (28) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தி, கலைவாணன், சக்தி, ராஜா, சுபாஷ் ஆகிய 5 பேருக்கும் நேற்று முன்தினம் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x