Published : 14 Dec 2021 03:09 AM
Last Updated : 14 Dec 2021 03:09 AM

மதுரை மாநகராட்சி தேர்தலில் திமுகவுக்கு காத்திருக்கும் சவால்கள் : 5 முக்கிய நிர்வாகிகள் ஒருங்கிணைவதில் குழப்பம்

மதுரை மாநகரில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என 5 முக்கிய நிர்வாகிகள் ஒருங்கிணைந்து பணியாற்றுவதில் எழுந்துள்ள குழப்பம் மாநகராட்சி தேர்தலில் திமுகவுக்கு சவாலாக இருக்குமோ என்ற அச்சம் கட்சியினரிடையே நிலவுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பணிகள் தொடங்கியுள்ளன. இத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் ஆளுங்கட்சியான திமுக அதிக ஆர்வம் காட்டி வருகிறது. மற்ற மாநகராட்சிகளில் இல்லாத குழப்பம் மதுரையில் உள்ளது.

தேர்தல் பொறுப்பாளர், வேட்பாளர் தேர்வு, மேயர், துணை மேயர் வேட்பாளரை முடிவு செய்வது என அனைத்து முக்கியப் பணிகளிலும் ஒரே நபர் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை உள்ளது.

இது குறித்து திமுக முக்கிய நிர்வாகிகள் கூறியது: மதுரை மாநகராட்சியில் 4 மண்டலமாக இருந்தது தற்போது 5 ஆக உயர்ந்துள்ளது. மதுரை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் பி.மூர்த்தியின் கட்டுப்பாட்டில் ஆனையூர், திருப்பாலை, சர்வேயர் காலனி, அல்அமீன் நகர், கண்ணனேந்தல், நாராயணபுரம், தபால்தந்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய 14 வார்டுகள் உள்ளன.

மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளரான எம்,மணிமாறன் கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், சிந்தாமணி, அனுப்பானடி, ஐராவதநல்லூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய 15 வார்டுகள் உள்ளன.

மதுரை மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளரான பொன்.முத்துராமலிங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை வடக்கு, தெற்கு சட்டப்பேரவை தொகுதியில் 32 வார்டுகள் உள்ளன.

மதுரை மாநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருக்கும் கோ.தளபதியின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மத்தி, மேற்கு சட்டப்பேரவை தொகுதிகளில் 39 வார்டுகள் உள்ளன. தேர்தல் வெற்றியைப் பொருத்து 5 மண்டலங்களில் பி.மூர்த்தி, எம்.மணிமாறன் ஆகியோர் கட்டுப்பாட்டில் தலா ஒரு மண்டலமும், பொன்.முத்துராமலிங்கம், கோ.தளபதி ஆகியோர் கட்டுப்பாட்டில் 3 மண்டலங்களும் வர வாய்ப்புள்ளது.

மாவட்ட நிர்வாகத்தில் பி.மூர்த்தியும் மாநகராட்சியில் மத்திய தொகுதி எம்எல்ஏவான அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மதுரை மேயர் பதவி பெண்களுக்கென ஒதுக்கியதில் இதுவரை மாற்றம் இல்லை. மேயர் தேர்வு மறைமுகத் தேர்தல் மூலம்தான் என்ற நிலையே தொடர்கிறது.

மதுரை மாநகராட்சி தேர்தல் வெற்றியில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்டச் செயலாளர் மற்றும் பொறுப்பாளர்களாக எம்.மணிமாறன், பொன்.முத்துராமலிங்கம், கோ.தளபதி என 5 பேர் உள்ளனர். தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட வார்டு கவுன்சிலர்களை வெற்றி பெறச் செய்தால்தான் மேயர் பதவியை திமுக கைப்பற்ற முடியும். மேயரை தான்தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் 5 பேரிடமும் பலத்த போட்டி உள்ளது.

பெண் மேயர் என்றால் கவுன்சிலர் பட்டியலிலேயே அவரது பெயர் இடம் பெற வேண்டும். இது வெளிப்படையாக தெரிந்தால் அப்போதே அதிருப்தி உருவாகும் நிலை உள்ளது. இது மேயராக வாய்ப்புள்ளவரை தோற்கடிக்க மறைமுக வேலை பார்க்கும் அளவுக்கும் செல்லலாம்.

மேயர் தேர்வில் ஒருவரின் பரிந்துரை தலைதூக்கிவிட்டால் துணை மேயர் பதவியைக் கைப்பற்ற மற்ற 4 பேரும் கடும் முயற்சியில் ஈடுபடுவர்.

தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கவுன்சிலர் வேட்பாளர்களை அமைச்சர், மாவட்டச் செயலாளர்களே தேர்வு செய்துவிட்டால் கட்சியினர் பலருக்கு வாய்ப்புக் கிடைக்காத நிலை உருவாகும். வார்டு அளவில் மட்டுமே அவரவர் கவனம் செலுத்துவர். மாநகர் முழுவதும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள முடியாத நிலை உருவாகும். அரசியல், சாதி என பெரிய அளவில் பின்னணி இல்லாத சாதாரண பெண் வேட்பாளரை மேயராக்கி, அவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் திட்டமும் முக்கிய பொறுப்பாளர்களிடம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனது மகளை மேயராக்க கோ.தளபதியும், எம்எல்ஏ. சீட் வழங்காததற்குப் பதிலாக தங்கள் குடும்பத்துக்கு மேயர் வாய்ப்புக் கேட்டு பொன்.முத்துராமலிங்கமும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். வேறு சிலரும் கட்சித் தலைமை மூலம் காய் நகர்த்தி வருகின்றனர்.

மழை நீர் தேங்குதல், பாதாள சாக்கடை பணிகள் காரணமாக மிக மோசமான நிலையிலுள்ள சாலைகளால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். உடனே சீரமைக்க சரியான நடவடிக்கை எடுக்கப்படாததன் மூலம் திமுக முக்கிய நிர்வாகிகளிடையே உள்ள இடைவெளி நன்றாகவே வெளிப்படுகிறது. இது தேர்தல் நேரத்தில் எதிரொலிப்பது நிச்சயம்.

இதையெல்லாம் மீறி ஆளுங்கட்சி என்பதால் வெற்றி பெற்றுவிடலாம் என்பது கட்சியினரின் கணக்கு. திமுக தலைமை மாநகராட்சி தேர்தல் பணியை முழுமையாக ஒருவரின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும். அப்படி இல்லாத சூழலில் நிர்வாகிகளிடையே நிலவும் பல்வேறு குழப்பங்களால் வெற்றி பெறுவது திமுகவுக்கு பெறும் சவாலாகவே இருக்கும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x