

தமிழகத்தில் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்ட பிரதான எதிர்கட்சியான அதி
முக தயங்குகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
அதிமுக எதிர்கட்சிக்கான வேலையை செய்யவில்லை. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவருமே மவுனமாகவுள்ளனர். ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி போராட தயங்குகின்றனர். அந்தப் பணியை நாம்தமிழர் கட்சிதான் சரியாக செய்து வருகிறது.
காவல் நிலைய மரணம் குறித்த வழக்கில் ஆளுங்கட்சியான திமுக இரட்டை நிலைப்பாடு எடுக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்துக்கு நீதிகேட்ட திமுக, மாணவர் மணிகண்டனின் மரணத்துக்கு நீதி கேட்பவர்களை அடக்குகிறது. நாம் தமிழர் கட்சி, மாரிதாஸ் கருத்தையும் ஏற்கவில்லை. அவரது கைது நடவடிக்கையும் ஆதரிக்கவில்லை.
மத்தியில் ஆளும் பாஜக ஆதரிக்கும் மேகேதாட்டு அணை திட்டத்தை எதிர்த்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்தும் தமிழக பாஜகவினர் போராட்டம் நடத்துவது நகைப்புக்குரியது என தெரிவித்தார்.