குழந்தைகளின் உணர்வுகளை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும் : கருத்தரங்கில் நாமக்கல் ஆட்சியர் அறிவுரை

குழந்தைகளின் உணர்வுகளை  பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும் :  கருத்தரங்கில் நாமக்கல் ஆட்சியர் அறிவுரை
Updated on
1 min read

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து பேசியதாவது:

அலுவலகங்கள், தொழிற்சாலை மட்டுமின்றி, வணிக நிறுவனங்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் பெண்|கள் மட்டுமல்லாது பெண் குழந்தைகள், வயதான பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

எனவே, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும் நிவர்த்தி சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கென 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விசாகா குழு அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், குழந்தைகளுக்கு நல்ல தொடுதல்கள், தவறான தொடுதல்கள் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும். பணி சூழல் காரணமாக குழந்தைகளிடம் பேசாமல் இருத்தல் கூடாது. குழந்தைகளிடம் தினமும் உரையாடி அவர்களின் அன்றாட செயல்பாடுகளையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஏதேனும் பாலியல் துன்புறுத்தல்கள் இருந்தால், புகார் எண் 1098 மற்றும் பெண்களுக்கான உதவி எண் 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டும், என்றார்.

இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் ஆர்.அகிலாண்டேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் ந.கதிரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in