

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட கட்டுமானதொழிலாளர் சங்க மாநில கோரிக்கை மாநாடு, சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன்மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பேசியதாவது:
அரசுக்கு இந்த மாநாடு மூலம்21 கோரிக்கைகளை முன்வைத்துள்ளீர்கள். அனைத்து கோரிக்கைகளும் நியாயமானவைதான். இவை குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுநிறைவேற்றித் தர நடவடிக்கை எடுப்பேன். கடந்த 10 ஆண்டுகளில் 75 ஆயிரம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படாமல் இருந்தன. திமுக அரசு கடந்த 200 நாட்களில் 1.07 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளது. மொத்த நிலுவைத்தொகையில் 90 சதவீதம் வழங்கப்பட்டுவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கத் தலைவர் நா.பெரியசாமி, சங்கப் பொதுச் செயலாளர் கே.ரவி, தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.