

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் மர்ம மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழக அரசு மர்மதேசமாகவே உள்ளது. இந்த அரசு எதிர்கட்சியை பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது. இன்னமும் அதிமுகவை குறை சொல்லி வருகிறார்கள். அதிமுக மீதான பழிவாங்கும் நடவடிக்கையை சட்டரீதியாக சந்திக்க தயாராக உள்ளோம்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறும் போதே அதன் தலைவர் கந்தசாமி முதல்வரை ஏன் சந்தித்தார்? வேலுமணியை கைது செய்யவேண்டும் என்பதுதான் இலக்கு. ஆனால் அதற்காக ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அத னால் முன்னாள் அமைச்சர் வேலுமணி கைது செய்யப்படவில்லை.
அரசு ஊழியர்கள் தயவு இல்லாமல் திமுக ஆட்சி அமைத்து இருக்க முடியாது. உயர் அதிகாரிகள் அச்ச உணர்வோடுதான் செயல்பட்டு வருகிறார்கள். தமிழக அரசின் நிர் வாகத்தை யார் செய்கிறார்கள் என்று முதல்வருக்கு தெரியுமா என தெரியாது. இந்த அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மிரட்டப்படுகிறார்கள்.
மாசுக்கட்டுப்பாட்டுவாரிய தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேர்மையானவர். ஆட்சி மாற்றத்திற்கு பின் அவரை ராஜினாமா செய்ய இந்த அரசு வற்புறுத்தியது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். அதன் பின் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டது. வழக்குக்காக வெங்கடாசலம் அச்சப்படவில்லை. அவர் தற்கொலை செய்து கொள்ளவேண்டிய அவசியம் என்ன? அவருக்கு என்ன நடைபெற்றது? வெங்கடாசலம் மர்ம மரணத்தை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும்.
ஒரு மாதம் முன்பு தொழிற் கல்வித்துறைக்கு கட்டிடம் கட்ட பொதுப்பணித்துறை அலுவலர் நியமிக்கப்பட்டார். அவர் வீட்டில் சோதனை நடைபெற்றபோது ரூ. 2.25 கோடி கைப்பற்றப்பட்டது. ஆனால் அவர் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. அவருக்கு 10 நாளில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது என்றார்.
நேர்மையானவர் ஆட்சி மாற்றத்திற்கு பின் அவரை ராஜினாமா செய்ய இந்த அரசு வற்புறுத்தியது.