

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த செவிலியராக வேலை பார்த்து வருபவர் வனஜா(39). இவர், நேற்று குடும்பத்துடன் மதுக்கூர் சென்றுவிட்டு, காரில் மன்னார்குடிக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
மதுக்கூர் சாலையில் லெக்கணாம்பேட்டை அருகே வந்தபோது, இவரது காருக்கு முன்புறம் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு இளைஞர், அவ்வழியாகச் சென்ற ஆடுகளின் மீது மோதி கீழே விழுந்தார். இதைக்கண்ட வனஜா மற்றும் அவரது குடும்பத்தினர், காரில் இருந்து இறங்கிச் சென்று பார்த்தனர். இதில், மயங்கிக்கிடந்த இளைஞரின் தலையில் காயம் ஏற்பட்டிருந்த நிலையில், இதயம் செயல்படாமல் இருப்பதை வனஜா அறிந்தார். இதையடுத்து, உடனடியாக தனது இரு கைகளையும் அந்த இளைஞரின் மார்பில் வைத்து அழுத்தி முதலுதவி சிகிச்சையை அளித்தார். இதில், அந்த இளைஞரின் இதயம் செயல்படத் தொடங்கியதுடன், அவர் சுயநினைவுக்கும் வந்தார்.
மல்லியம்பட்டினத்தில் பாலி டெக்னிக் 3-ம் ஆண்டு படித்து வரும் கருவாக்குறிச்சியைச் சேர்ந்த வசந்த் என்ற அந்த இளைஞர், 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, செவிலியர் வனஜாவுக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.