Published : 11 Nov 2021 03:08 AM
Last Updated : 11 Nov 2021 03:08 AM

சிறுவாச்சூர் கோயிலில் சாமி சிலைகள் சேதம் - ஏற்கெனவே கைதானவரிடம் போலீஸார் விசாரணை :

பெரம்பலூர்

சிறுவாச்சூர் கோயிலில் சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக ஏற்கெனவே கைதா னவரிடம் போலீஸார் மீண்டும் விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலின் உப கோயில்களான பெரியசாமி, செங்கமலையார் கோயில்களில் கடந்த அக்.6, 27 மற்றும் நவ.9 ஆகிய தேதிகளிலும், சிறுவாச்சூரில் உள்ள பெரியாண்டவர் கோயிலில் அக்.8-ம் தேதியும் சாமி சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிகழ்வுகள் தொடர்பாக, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்கிற நாதன்(42) என்பவரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், பெரியசாமி, செங்கமலையார் கோயில்களில் நேற்று முன்தினம் மீண்டும் சாமி சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.

இதுதொடர்பாக, சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் பார்வையிட்டதில், மதுரகாளியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் நாதன் சாமி கும்பிடுவதும், அப்பகுதியில் நடந்து செல்வதும் பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று காலை நாதனை போலீஸார் மீண்டும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், காட்டுப்பகுதியில் உள்ள கோயில் சிலைகளின் பாதுகாப்பு கருதி பெரியசாமி, செல்லியம்மன் கோயில்களைச் சுற்றி ரூ.3.10 லட்சத்துக்கும், செங்கமலையான், ஆத்தடியான் கோயில்களைச் சுற்றி ரூ. 3.70 லட்சத்துக்கும் இரும்புக் கம்பிகளால் பாதுகாப்பு வேலிகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தர்ணாவில் ஈடுபட்ட 4 பேர் கைது

இதற்கிடையே, சிறுவாச்சூர் கோயில்களில் சாமி சிலைகளை சேதப்படுத்திவரும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், கோயில்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள காந்தி சிலை முன்பு நேற்று அனுமதி பெறாமல் தர்ணாவில் ஈடுபட்ட இந்து முன்னணி திருச்சி கோட்டத் தலைவர் குணசேகரன் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x