Published : 09 Nov 2021 03:10 AM
Last Updated : 09 Nov 2021 03:10 AM

விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை - தரைப்பாலங்கள் மூழ்கின: பல கிராமங்கள் துண்டிப்பு : இதுவரை 52 வீடுகள் சேதம், 2 பேர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழையால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 52 வீடுகள் சேதமடைந்துள்ளன. 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 23-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் சில நாட்கள் இடைவெளிவிட்ட பின்னர் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து பகலும் இடைவிடாமல் கொட்டி தீர்த்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்றும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடு முறை அளிக்கப் பட்டன.

அரசு கல்லூரிகளில் இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கையும் வரும் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கனமழையால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், கீழ் பெரும்பாக்கம் தரைப்பாலம், விஜிபி நகர், தாமரைகுளம், வழுதரெட்டி, பிரதான சாலையான நேருஜி சாலையும் வெள்ளநீரில் தத்தளித்தது.

வழுதரெட்டி, தாமரை குளம் உள்ளிட்ட பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது.

வெள்ள நீர் வெளியேற்றும் பணிகளை அமைச்சர் பொன்முடி, எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி மாவட்ட ஊராட்சிகுழுத்தலைவர் ஜெயச்சந்திரன், ஆட்சியர் மோகன், முன்னாள் சேர்மன் ஜனகராஜ் மற்றும் அன்னியூர்சிவா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து மழை வெள்ள மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

வானூர் அருகே திருவக்கரையில் சாலையில் விழுந்த புளியமரம் அகற்றப்பட்டது. மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தென்பெண்ணை மற்றும் கிளை ஆறுகளான மலட்டாறு பம்பை வாய்க்கால் உள்ளிட்ட ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் செல்கிறது. இதனால் திருவெண்ணெய்நல்லூர், விழுப்புரம் அருகே பில்லூர், காணை உள்ளிட்ட பகுதிகளில் தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் செல்வதால், பல கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அரகண்டநல்லூரிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் தரைப்பாலம், செஞ்சி அருகே மேலச்சேரி தரைப்பாலம், தென் பாலை தரைப்பாலம், மேல்களவாய் தரைப்பாலம், திண்டிவனம் அருகே ஆலங்குப்பம் ரயில்வே தரைப்பாலம் ஆகியவற்றை வெள்ளநீர் சூழ்ந்ததால் அவைகள் மூடப்பட்டன. இதனால் பல கிராமங்கள் வெளியுலகிலிருந்து துண்டிக்கப்பட்டது.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை 40 வீடுகள் பாதியளவும், இரண்டு வீடுகள் முழுமையாகவும் என மொத்தம் 52 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல் தொடர் மழையினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலைவரை பெய்த மழைஅளவு,விழுப்புரம் - 41 மி.மீ,கோலியனூர் - 60 மி.மீ,வானூர் - 21 மி.மீ, மரக்காணம் - 76 மி.மீ, செஞ்சி - 18 மி.மீ

வல்லம் - 70 மி.மீ, மணம்பூண்டி - 56 மி.மீ, திண்டிவனம் - 50 மி.மீ, மாவட்டம் முழுவதும் நேற்று காலைவரை 895.50 மில்லி மீட்டரும், சராசரியாக 42.64 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x