

தமிழகத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் திறக்கப்பட்டன. நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஜின் பாக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இனிப்பு, நோட்டுகள் மற்றும் எழுதுபொருட்களை வழங்கி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தூத்துக்குடி அருகேயுள்ள பண்டாரம்பட்டி கிராம மக்கள் மேளதாளம் முழங்க மாணவர்களுடன் ஊர்வலமாக சென்று பள்ளிக்கு சீர்வரிசையாக பல்வேறு உபகரணங்களை வழங்கினர். மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் பள்ளிகளில் பலூன்கள், வண்ண காகிதங்கள் கொண்டு தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. பெரும்பாலான மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடனே நேற்று பள்ளிக்கு வந்திருந்தனர். மாணவர்களுக்கு நேற்று மதியஉணவில் காய்கறி பிரியாணி, கேசரி போன்றவை வழங்கப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறும்போது, “ பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். தூத்துக்குடி மாநகர் பகுதியில் ஒரு பள்ளி வளாகத்தில் மட்டும் மழைநீர் தேங்கி சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் கூறி மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார்.
கோவில்பட்டி
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஜீ.வி.மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டி.எஸ்.பி. உதயசூரியன் மாணவர் களை வரவேற்றார்.
தென்காசி
நாகர்கோவில்
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இன்று (2-ம் தேதி) வகுப்புதொடங்கப்படும் என பள்ளிகளில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
ஆனால், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு வழக்கம் போல் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படும் என குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டது.
இதனால் குழப்பமடைந்த பெற்றோர் பள்ளிகளை தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது, தீபாவளி பண்டிகையுடன் தொடர்ச்சியாக விடுமுறை இருப்பதால் வரும் 8-ம் தேதி தான் 1 முதல் 5 வரை வகுப்புகள் தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும், அதுகுறித்து முறையான அறிவிப்பு இதுவரை வரவில்லை, வந்ததும் தகவல் தெரிவிக்கப்படும் எனக் கூறினர். இதனால் குழந்தைகளின் பெற்றோர் குழப்பமடைந்தனர்.