பலகாரம் தயாரிப்போர், விற்பனையாளர் வணிகத்தை பதிவு செய்ய அறிவுறுத்தல் :

பலகாரம் தயாரிப்போர், விற்பனையாளர்  வணிகத்தை பதிவு செய்ய அறிவுறுத்தல் :
Updated on
1 min read

பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் அல்லது பதிவு பெற்றுக் கொள்ளவேண்டும், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக உணவுக் கூடங்கள், திருமண மண்டபங்கள், வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவர்களிடம் ஆர்டரின் பேரில் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் காரவகைகளுக்கு உணவுப் பாதுகாப்பு சட்டவிதிகளின்படி உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.

இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், தரமான, கலப்படமில்லாத மூலப் பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். பண்டிகைகால இனிப்பு வகைகளை பேக்கிங் செய்யும் போது பாலால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை மற்ற இனிப்பு பொருட்களுடன் பேக்கிங் செய்து விற்பனை செய்யக்கூடாது.

பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையார்களும் உடனடியாக https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் அல்லது பதிவு பெற்றுக்கொள்ளவேண்டும்.

பொதுமக்கள் உணவுப் பொருட்கள் சம்பந்தமாக 94440 - 42322 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாகவோ அல்லது வாய்மொழியாகவோ புகார் தெரிவிக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in