Published : 30 Oct 2021 03:15 AM
Last Updated : 30 Oct 2021 03:15 AM

தஞ்சை மாவட்டத்தில் செயற்கையான உரத் தட்டுப்பாடு : குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயத்துக்கு தேவைப்படும் உரங்களை தனியார் வியாபாரிகள் பதுக்கி வைத்து, செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, கூடுதல் விலைக்கு உரத்தை விற்பனை செய்வதால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், வேளாண்மை, வருவாய், கூட்டுறவு, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை உயர் அலுவலர்கள், முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் உரக்கடைகளிலும் டிஏபி உரம் இருப்பு இல்லை. யூரியா வேண்டுமென்றால், பொட்டாஷ், நுண்ணூட்ட உயிர் உரங்களை வாங்க கட்டாயப்படுத்துகின்றனர். யூரியாவும் மூட்டைக்கு ரூ.100 கூடுதலாக வைத்து விற்கப்படுகிறது. மாவட்டத்தில் செயற்கையான உரத் தட்டுப்பாட்டை தனியார் வியாபாரிகள் ஏற்படுத்துகின்றனர். எனவே, அரசு உயர் அலுவலர்கள் ரகசியமாக கள ஆய்வு நடத்தி, முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறுவை நெல் அறுவடை தற்போது தீவிரமாக இருப்பதால், நெல் கொள்முதலை மாவட்டம் முழுவதும் விரைவுப்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் முறையாக கடனை திருப்பி செலுத்திய, பயிர்க் கடன் கேட்ட விவசாயிகளுக்கும் இதுவரை கடன் வழங்கவில்லை. கடந்தாண்டு பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் விவரங்களை உடனடியாக இணையதளத்தில் வெளியிட வேண்டும். மழைக்காலம் தொடங்க இருப்பதால், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்த நவ.30-ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் நகை கடன், பயிர்க் கடன் வழங்கியதில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பின்னர், ஆட்சியர் பேசும்போது, ‘‘தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி தற்போது 1.84 லட்சம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான அளவு விதை நெல், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது குறுவை அறுவடை தீவிரமாக உள்ளதால் மாவட்டத்தில் 318 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 1,52,553 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 30,117 விவசாயிகளுக்கு ரூ.310 கோடி வங்கி மூலம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் 132 மனுக்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டதில், 22 மனுக்கள் நிலுவையில் உள்ளன. மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த குறைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x