

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே வெள்ளையன் வலசையைச் சேர்ந்த பாலுச்சாமி மனைவி முத்துராக்கு (50). இவர் நேற்று இரு சக்கர வாகனத்தில் தங்கச்சிமடத்தில் உள்ள தேவாலயத்துக்குச் சென்று விட்டு மீண்டும் திருப்புல்லாணிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, பிரப்பன் வலசை பெட்ரோல் பங்க்குக்கு செல்வதற்காக சாலையின் வலதுபுறம் திரும்பியபோது, முத்துராக்கின் இரு சக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த கார் மோதியது.
படுகாயமடைந்த முத்துராக்கு உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த திருநெல்வேலி களக்காடைச் சேர்ந்த பாஸ்டன் ஆண்டனி நெல்சன் மீது உச்சிப்புளி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.