

தென்காசி மாவட்ட தலைமை அரசுமருத்துவமனையில் மார்பக புற்றுநோய் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மார்பகம் சம்பந்தமான அனைத்து பரிசோதனைகளும் ஸ்கேன், மமோகிராம், நோய் அறிகுறி பற்றிய ஆலோசனை, அறிவுரைகள், சிகிச்சை வழங்கப்பட்டது.
முகாமை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, நெல்லை கேன்சர் கேர் சென்டர், குற்றாலம் ரோட்டரி கிளப், தென்காசி மகளிர் சக்தி ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து நடத்தின. மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா தொடங்கி வைத்தார். குழந்தைகள் நல மருத்துவர் கீதா வரவேற்றார். நலப்பணிகள் இணை இயக்குநர் வெங்கட்ரங்கன் மார்பகப் புற்றுநோய் குறித்து பேசினார்.
தென்காசி சக்தி ரோட்டரி கிளப் தலைவர் கிருஷ்ணவேணி, நெல்லை கேன்சர் சென்டர் உதவும் கரங்கள் முருகன், குற்றாலம் ரோட்டரி கிளப் தலைவர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மருத்துவர்கள் கீதா, லதா, மல்லிகா, ஜெரின் இவாஞ்சலின் உள்ளிட்டோர் சிகிச்சை அளித்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் நன்றி கூறினார்.