ஒலக்கூர் ஒன்றிய குழுத் தலைவர் தேர்தலில் - சுயேச்சை ஆதரவாளர்கள் மறியல் : தீக்குளிக்க முயற்சி : போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்

ஒலக்கூர் ஒன்றிய குழுத் தலைவர் தேர்தல் விவகாரத்தால் திண்டிவனம் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற சாலை மறியல்.
ஒலக்கூர் ஒன்றிய குழுத் தலைவர் தேர்தல் விவகாரத்தால் திண்டிவனம் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற சாலை மறியல்.
Updated on
1 min read

ஒலக்கூர் ஒன்றிய குழுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சுயேச்சை வார்டு உறுப்பினரின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர் .

திண்டிவனம் அருகே ஒலக்கூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்த ஏற்பாடு செய்யப்பட்டது. தலைவர் பதவிக்கு திமுக மற்றும் சுயேச்சை வார்டு உறுப்பினர்கள் என இருவர் போட்டியிட்டனர். இந்நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு 3 சுயேச்சை வார்டு உறுப்பினர்கள் வராததால் தலைவரை தேர்வு செய்ய காலதாமதம் ஏற்பட்டது.

இதில் ஒரு வார்டு உறுப்பினர் வரவே இல்லை. இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட சொக்கலிங்கம் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுயேச்சை வேட்பாளர் எழிலரசன் ஏழு வாக்குகள் பெற்று தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தோல்வி அடைந்த சுயேச்சை வார்டு உறுப்பினரின் ஆதரவாளர்கள் திண்டிவனம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறமும் 2 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது சாலை மறியலில் ஈடுபட்டிருந்த ஒருவர் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீஸார் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை கைது செய்ய முனைந்தனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் அனைவரும் சேர்ந்து அவரை இழுத்து சென்றனர். இதைத்தொடர்ந்து திண்டிவனம் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்துசாலை மறியலை விலக்கி கொள்ளாததால் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் போக்குவரத்து சீரானது.

திண்டிவனம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in