Published : 19 Oct 2021 03:09 AM
Last Updated : 19 Oct 2021 03:09 AM

மழை காலங்களில் ஏற்காடு மலைப்பாதையில் - பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை சேமிக்க வலியுறுத்தல் :

மழை காலங்களில் ஏற்காடு மலைப்பாதையில் ஏற்படும் நீர்வீழ்ச்சியில் இருந்து வெளியேறும் தண்ணீரை சேமிக்க சிறு தடுப்பணைகள் கட்ட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஏற்காடு மலைப்பதை 21 கொண்டை ஊசி வளைவுகளுடன் 5,326 அடி (1623 மீட்டர்) உயரத்தில் உள்ளது. இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. இங்கு புள்ளிமான், காட்டெருது, நரி, கீரி, பாம்பு உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்களின் இருப்பிடமாக அமைந்துள்ளது.ஏற்காட்டில் 60 வனக்கிராமங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் ஏற்காட்டில் மழை பொழிவு அதிகளவு இருக்கும். ஆண்டுதோறும் குளுமையான சீதோஷ்ண நிலை நீடிப்பதால், ஏற்காட்டில் காஃபி, சில்வர் ஓக், ரோஸ் வுட், சந்தனம், சவுக்கு, பேரிக்கா, பலா மரங்கள் அதிகம் உள்ளன.

தற்போது, ஏற்காட்டில் பெய்த தொடர் மழையால் மலைப்பாதையில் ஆங்காங்கே திடீர் நீர் வீழ்ச்சி ஏற்பட்டு, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. ஏற்காடு மலைப்பாதையில் 50-க்கும் மேற்பட்ட பாறை குன்றுகளுக்கு இடையே இருந்து பெருக்கெடுத்துக் கொட்டும் நீர் வீழ்ச்சியில் இருந்து வெளியேறும் தண்ணீர் அடிவாரம் பகுதி வழியாக கற்பகம் ஓடைக்கு சென்று, புது ஏரி, மூக்கனேரி வழியாக திருமணிமுத்தாற்றை வந்தடைந்து, காவிரியில் வீணாக கலந்து வருகிறது.

எனவே, இந்நீரை சேமிக்க சிறு தடுப்பணைகள் கட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x