

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கருணை அடிப்படையிலான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், திருவாரூர் மின் பகிர்மான கழகத்தில் பணியாற்றி உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த 5 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.15 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணவேணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்(பொ) முத்தமிழ்செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.