

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை பதவியேற்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், 122 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்கள், 204 ஊராட்சி தலைவர்கள், 1,731 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
6 ஊராட்சித்தலைவர்கள், 378 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தனர். மற்ற பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்கும் முதல் கூட்டம் நாளை (20-ம் தேதி) நடைபெறுகிறது. வரும் 22-ம் தேதி மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி துணைத்தலைவர்களை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது.
தென்காசி
6 ஊராட்சித் தலைவர்கள், 400 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 406 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். எஞ்சிய 1,878 பதவிகளுக்கு 6,376 பேர் போட்டியிட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்களில் நடைபெறும் கூட்டத்தில் பதவியேற்கின்றனர்.
தொடர்ந்து, வரும் 22-ம் தேதி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு தலா ஒருவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களாக 10 பேர், துணைத் தலைவர்களாக 10 பேர், ஊராட்சி துணைத் தலைவர்களாக 221 பேர் என மொத்தம் 242 பேரை தேர்ந்தெடுக்க மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த பதவிகளை கைப்பற்ற உறுப்பினர்களிடம் லட்சக்கணக்கில் பேரம் நடப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அசம்பாவித சம்பவங் களைத் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.