Published : 19 Oct 2021 03:10 AM
Last Updated : 19 Oct 2021 03:10 AM

பிஎஸ்என்எல் அதிகாரி வீட்டில் - 35 பவுன் நகை, பணம் திருட்டு :

தி.மலையில் திருட்டு நடந்த பிஎஸ்என்எல் அதிகாரி வீட்டில் தடயங்களை சேகரித்த கை ரேகை நிபுணர். படம்: இரா.தினேஷ்குமார்.

திருவண்ணாமலை

தி.மலை நகரம் அவலூர்பேட்டை சாலை எம்ஆர்டி நகரில் வசிப்பவர் கிருஷ்ணகுமார்(37). இவர், திருவண்ணாமலை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர், தனது மனைவி ரம்யா, மகன் யஷ்வந்த் ஆகியோரை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை அடுத்த ராந்தம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று நண்பகல் 12 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன் பக்க கிரீல் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு உள் பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருப்பதும் மற்றும் இரும்பு ராடு மூலமாக மரக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, 2 அறைகளில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், வீட்டின் பின் பக்க கதவு திறந்திருந்தது. ஒரு அறையில் துணிகள் வைக்கும் இடத்தில் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து, அதிலிருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 35 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி, ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு, பின்வாசல் வழியாக மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தி.மலை நகர காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும், கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வீடுகள் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில், வீட்டின் கதவு மற்றும் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x