Published : 19 Oct 2021 03:10 AM
Last Updated : 19 Oct 2021 03:10 AM

வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றவர் மீது பொய் வழக்கு? : சிறையில் உள்ளவரை விடுவிக்க ஆட்சியரிடம் மனு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம் நேற்று மனு அளித்த கிருஷ்ணனின் குடும்பத்தினர். படம்:ந.சரவணன்.

திருப்பத்தூர்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பின ராக வெற்றி பெற்றவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்து, அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அவரது குடும்பத்தினர் நேற்று மனு அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங் காயம் ஒன்றியம் வளையாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (37). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். கிருஷ்ணனின் தந்தை சிவலிங்கம் பல வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் சாராய வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சாராய வழக்கில் அடிக்கடி கைதாகி சிறைக்கு சென்று வந்த சிவலிங்கம், அதன் பிறகு மனம் திருந்தி சாராய தொழிலை கைவிட்டு, உடல் நலம் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். சிவலிங்கம் மறைவுக்கு பிறகு, அவரது மகன் கிருஷ்ணன் சாராய வியாபாரம் செய்வதாகக் கூறி காவல்துறையினர் அடிக்கடி அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்து வந்தனர்.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வளையாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு கிருஷ்ணன் வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு ‘சீப்பு’ சின்னம்ஒதுக்கப்பட்டது. 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

வாக்குப்பதிவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு கிருஷ்ணனை சாராய வழக்கில் கைது செய்த ஆலங்காயம் காவல் துறையினர் அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கிருஷ்ணன் சிறைக்கு சென்றாலும், அவரது குடும்பத்தினர் அவருக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்திரா நகர் 9-வது வார்டு உறுப்பினராக சிறையில் இருந்த படி போட்டியிட்ட கிருஷ்ணன் மொத்தமுள்ள 372 வாக்குகளில் 194 வாக்குகள் பெற்று வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்நிலையில், உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனைவரும் நாளை 20-ம் தேதி பதவி ஏற்க வேண்டும் என்பதால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிருஷ்ணன் பதவி ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி சிறையில் உள்ள கிருஷ்ணனை விடுவிக்க வேண்டும் என அவரது மனைவி தன் குடும்பத்தாருடன் வந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்.

மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர், இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். சாராய வழக்கில் கைதாகி வார்டு உறுப்பினராக வெற்றிபெற்றவரை விடுவிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த இந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x