Published : 16 Oct 2021 06:13 AM
Last Updated : 16 Oct 2021 06:13 AM

10 ஆண்டுகளில் ஊழல், சட்டம்- ஒழுங்கில் சீரழிந்த - தமிழகத்தை மீட்டெடுக்க முதல்வர் முயற்சி : இரா.முத்தரசன் பேட்டி

தமிழகம் 10 ஆண்டுகளில் சீரழிந்து விட்டது, அதை மீட்பது சாதாரண விஷயமல்ல, என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டையில் கட்சி சார்பில் நடந்த செந்தொண்டர் பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. மக்களின் நம்பிக்கைக்குரியதாக எங்கள் அணி இருக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் சட்டம்-ஒழுங்கு, ஊழலில் தமிழகம் சீரழிந்து விட்டது. அதை மீட்டெடுப்பது சாதாரண விஷயம் இல்லை. அதில் தொடர்புடைய பல அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்களை உடனடியாக வெளியேற்ற முடியாது. அவர்களையும் சமாளித்து மீட்டெடுக்கும் முயற்சியிலும் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.

ஜெயலலிதா சமாதிக்கு யார் வேண்டுமானாலும் போகலாம். போகிறவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் கடமை. ஏழு பேர் விடுதலை குறித்து தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுதான் உள்ளோம். இதில் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தங்களது பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி விவசாயிகள், தொழிலாளர்கள், அரசியல் அமைப்புக்கு எதிராகச் செயல்படலாம் என்ற மனப்போக்கில் நடந்துகொண்டிருக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால் மோடி அரசு, அரசியல் அமைப்புக்கு விரோதமாக சர்வாதிகாரப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இது நாட்டுக்கு ஆபத்தானது.

மத்திய அரசு சகல பொதுத்துறை நிறுவனங்களையும் அடிமாட்டு விலைக்கு விற்க தொடங்கிவிட்டது. இது நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்துக்கும் நல்லதல்ல. அதேபோல் 3 விவசாய சட்டங்கள் பெருநிறுவன முதலாளிகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. அதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற வேண்டும், என்றார்.

முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், மாவட்டச் செயலாளர் கண்ணகி உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x