விஜயதசமி விழாவை முன்னிட்டு - ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் அம்பு போடும் நிகழ்ச்சி :

விஜயதசமி விழாவை முன்னிட்டு -  ரங்கம் ரங்கநாதர் கோயிலில்  நம்பெருமாள் அம்பு போடும் நிகழ்ச்சி :
Updated on
1 min read

விஜயதசமி விழாவையொட்டி ரங்கம் ரங்நாதர் கோயிலில் நம்பெருமாள் அம்பு போடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் அக்.6-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் சரஸ்வதி பூஜையுடன் நிறைவடைந்தது. இந்தநாட்களில் தினந்தோறும் தாயார் ரங்கநாச்சியார் கொலு மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் முக்கிய நிகழ்ச்சியான தாயார் திருவடி சேவை அக்.12-ம் தேதி நடைபெற்றது. ஆண்டுதோறும் விஜயதசமி நாளன்று காலை நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு காட்டழகிய சிங்கர் கோயிலுக்கு சென்று ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பின்னர் மாலையில் அங்கிருந்து தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு, கோயில் வளாகத்தில் உள்ள வன்னிமரத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் திருவீதியுலா வந்து மூலஸ்தானம் சென்றடைவார்.

இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக நம்பெருமாள் வீதியுலா நடைபெறவில்லை. எனவே, நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் வளாகத்திலேயே நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், அம்புபோடும் நிகழ்ச்சியும் ரங்கநாதர் கோயில் வளாகத்தில் உள்ள கருடமண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி நேற்று பிற்பகல் 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு கருட மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு இரவு 8 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். கருட மண்டபத்திலேயே இரவு 8.45 மணியளவில் அம்புபோடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

சமயபுரத்தில்..

இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in