இந்திய பருத்திக் கழகத்துக்கு - பருத்தி கையிருப்பு திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும் : பிரதமருக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் வேண்டுகோள்

இந்திய பருத்திக் கழகத்துக்கு  -  பருத்தி கையிருப்பு திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும் :  பிரதமருக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் வேண்டுகோள்
Updated on
2 min read

இந்தியாவில் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பருத்தி கையிருப்பு திட்டத்தை இந்திய பருத்தி கழகத்துக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என பிரதமருக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, சைமா தலைவர் ரவி சாம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய பருத்திக் கழகம் (சிசிஐ), பருத்தி சீஸனில் குறைந்தபட்ச நிர்ணய விலையில் தான் கொள்முதல் செய்த பருத்தியை மொத்த விற்பனைக்கு 120 நாட்கள் வரை வட்டியின்றி இருப்பு வைத்துக் கொள்ளும் வசதியோடு தள்ளுபடியையும் அளிப்பதால் பருத்தி விற்பனையாளர்கள் ஊக வணிகத்தில் ஈடுபட வசதியாகிறது. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் ஏற்றுமதி ஆர்டர்களை முடித்துக் கொடுப்பதில் சிக்கலை சந்திப்பதோடு, இழப்பையும் சந்திக்கின்றனர். இதையடுத்து நூல் விலை ஏறுவதால் ஆடை உற்பத்தியாளர்கள் நூல் விலையைக் குறைக்கக் கோரி அரசை நிர்பந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையைத் தவிர்க்க பருத்தி விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை ஸ்திரப்படுத்தும் வகையில் விலை நிலைப்படுத்தல் நிதி திட்டத்தை அறிவிக்க வேண்டும். இதனை சைமா சார்பில் கோரிக்கையாக பிரதமருக்கு முன் வைத்துள்ளோம்.

நியூயார்க் பருத்தி சந்தையில், பருத்தியானது பவுண்ட் ஒன்றுக்கு 70 முதல் 80 சென்ட் என்று இருந்தது. தற்போது 110 சென்ட்டாக உயர்ந்து நிச்சயமற்ற தன்மையை பருத்தி ஜவுளித் தொழிலில் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் நியூயார்க் பருத்தி சந்தையில் 25 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பருத்தி கையிருப்பு போதிய அளவில் இருந்தபோதும் சங்கர்-6 ரக பருத்தியின் விலை கடந்தாண்டு டிசம்பரில் கண்டி ஒன்றுக்கு ரூ.41,900-ல் இருந்து தற்போது அக்டோபர் முதல் வாரத்தில் ரூ.57 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பிற பருத்தி ரகங்களும் கடுமையாக விலை உயர்ந்துள்ளன.

கடந்த 10 ஆண்டுகளின் மாதாந்திர பருத்தி விலையை ஆய்வு செய்தால், மூன்றில் ஒரு பங்கு பருத்தியை மட்டுமே நூற்பாலைகள் சீஸனில் வாங்குகின்றனர். அதே நேரத்தில் மூன்றில் இரு பங்கு பருத்தியை குறிப்பாக பன்னாட்டு வியாபாரிகள் வாங்குகின்றனர். பருத்தி வாங்குவதை தாமதப்படுத்தி நவம்பர் மாதம் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் பருத்தி விலையை வீழ்ச்சியடையச் செய்கின்றனர். இதனால் பருத்தி விவசாயிகள் மிகுந்த இழப்பை சந்திக்கின்றனர். ஜவுளித்துறையினரோ பருத்தி பற்றாக்குறையை சமாளிக்க அடிக்கடி பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.

அதோடு, பருத்தி இறக்குமதி மீது விதிக்கப்படும் 10 சதவீத வரி தற்போதைய சீஸனில் ஏற்படுத்தும் தாக்கத்தை தடுக்க போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இல்லையெனில் நிலைமை மேலும் சிக்கலாகும்.

எனவே, விலையை ஸ்திரப்படுத்தும் வகையில் பருத்தி கையிருப்பு திட்டத்தை இந்திய பருத்தி கழகத்துக்கு உருவாக்கி, அதற்கு தேவையான நிதியை குறைந்த வட்டியில் மத்திய அரசு அளித்து, பருத்தி சீஸனில் உற்பத்தியாகும் 10 முதல் 15 சதவீத பருத்தியை வாங்கி இந்திய பருத்திக் கழகம் இருப்பு வைத்து, விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்தி, சீஸன் இல்லாத காலத்தில் பருத்தியை நூற்பாலைகளுக்கு மட்டும் விற்பனை செய்யும் வகையில் திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in