

அமைப்புசாரா நல வாரியங்களில் நிலுவையில் உள்ள பதிவு, புதுப்பித்தல், ஓய்வூதிய விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கையை 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவிட்டுள்ளார்.
தொழிலாளர் துறை அலுவலர்களின் பணி தொடர்பாக அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் தொழிலாளர் நலத் துறை செயலர் கிர்லோஷ்குமார், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:
சென்னையில் 50 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை கடந்த ஜூலை 30-ம் தேதி முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும், 35 ஆயிரம் தொழிலாளர்களின் மனுக்கள் மீது நலத்திட்ட உதவிகளை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அதேபோல், அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் நிலுவையில் உள்ள பதிவு, புதுப்பித்தல், ஓய்வூதிய விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கையை 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.
தொழிலாளர் துறையின் நீதிசார், சமரசம், ஆய்வுப்பணிகளில் கண்டறியப்பட்ட நிலுவைகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும். நுகர்வோர் நலன் காக்க, சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் தொடர் ஆய்வுகள் குறிப்பாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, பொட்டல பொருட்களை அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கு கூடுதலாக விற்கும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், எடையளவுகள் உரிய காலத்துக்குள் முத்திரையிடப்பட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.