Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நடைபெற்ற - ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் : அதிக இடங்களை திமுக கைப்பற்றியது

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில், அதிக இடங்களை திமுக கைப்பற்றியது.

கோவை மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 2 ஊராட்சி மன்ற தலைவர்கள், 10 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 9-ம் தேதி நடந்தது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன.

மாவட்ட ஊராட்சியின் 3-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுகவின் இ.ஆனந்தன், அதிமுகவின் அ.கருப்புசாமி உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் 9 சுற்றுகளின் முடிவில் திமுகவின் இ.ஆனந்தன் 26,292 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கருப்புசாமிக்கு 13,251 வாக்குகள் கிடைத்தன.

ஆனைமலை ஒன்றியத்துக்குட்பட்ட, திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவராக சி.கலைவாணி 4,372 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட தென்குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக கு.நாராயணமூர்த்தி 1,451 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இருவரும் திமுக ஆதரவு வேட்பாளர்கள் ஆவர். திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆதரவு வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

காரமடை ஒன்றியம் தேக்கம்பட்டி ஊராட்சியின் 15-வது வார்டில் ப.முத்துகுமார், வெள்ளியங்காடு ஊராட்சியின் 10-வது வார்டில் ப.முருகம்மாள், பெள்ளாதி ஊராட்சியின் 3-வது வார்டில் ம.சுரேஷ், கிணத்துக்கடவு ஒன்றியம் நெ.10 முத்தூர் ஊராட்சியின் 2-வது வார்டில் மா.மகேந்திரன், எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கள்ளிபாளையம் ஊராட்சியின் 5-வது வார்டில் ப.மனோன்மணி, சுல்தான்பேட்டை ஒன்றியம் போகம்பட்டி ஊராட்சியின் 6-வது வார்டில் ப.சந்தியா, தொண்டாமுத்தூர் ஒன்றியம் மாதம்பட்டி ஊராட்சியின் 3-வது வார்டில் சு.சிவபிரகாஷ், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சியின் 9-வது வார்டில் ஆ.அருள்ராஜ், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் ஜமீன் முத்தூர் ஊராட்சியின் 6-வது வார்டில் ரா.செந்தில்குமார், மதுக்கரை ஒன்றியம் சீரபாளையம் ஊராட்சியின் 4-வது வார்டில் மு.ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஒரு ஒன்றிய கவுன்சிலர், மூன்று ஊராட்சி மன்ற தலைவர்கள், 7 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 12 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.

காங்கயம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய திருப்பூர் மாவட்ட ஊராட்சியின் 10-வது வார்டு இடைத்தேர்தலில், கிருஷ்ணவேணி வரதராஜ் (திமுக), லட்சுமி சோமசுந்தரம் (அதிமுக) உட்பட 7 பேர் போட்டியிட்டனர். நத்தக்காடையூரை அடுத்த ஈபிஈடி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் கிருஷ்ணவேணி வரதராஜ் அதிமுக வேட்பாளரைவிட 5,366 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். கிருஷ்ணவேணி வரதராஜுக்கு மொத்தம் 22,790 வாக்குகள் கிடைத்தன.

தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் 12-வது வார்டில், திமுக வேட்பாளர் சுப்பிரமணி 2,669 வாக்குகள்பெற்று வெற்றிபெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் 1,267 வாக்குகள் பெற்றார்.

அவிநாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சி மன்ற தலைவராக திமுக ஆதரவு வேட்பாளர் முருகன் வெற்றி பெற்றுள்ளார். மூலனூர் ஒன்றியம் எரிசனம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுக ஆதரவு வேட்பாளர் மாரித்தாய் வெற்றி பெற்றுள்ளார்.

பணிக்கம்பட்டி ஊராட்சியின் 8-வது வார்டில் பட்டான், மாணிக்காபுரம் ஊராட்சியின் 5-வது வார்டில் பிருந்தா, பழங்கரை ஊராட்சியின் 9-வது வார்டில் தங்கபாண்டி, வடுகபாளையம் ஊராட்சியின் 4-வது வார்டில் கோகுல்ராஜ், கருப்பன்வலசு ஊராட்சியின் 3-வது வார்டில் செல்வி, வெள்ளகோவில் ஒன்றியம் மேட்டுப்பாளையம் ஊராட்சியின் 1-வது வார்டு உறுப்பினராக பொன்னுசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

குடிமங்கலம் ஒன்றியம் ஆமந்தகடவு ஊராட்சியின் 5-வது வார்டில் வேலுத்தாயி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட ஜீவிதாவுக்கு 111 வாக்குகள் கிடைத்தன.

உடுமலை ஒன்றியம் ஆர்.வேலூர் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் அதிமுக ஆதரவு வேட்பாளர் அன்னலட்சுமி 460 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளர் கலாமணி 417 வாக்குகள் பெற்றார்.

நீலகிரி மாவட்டம்

நீலகிரியில் 2 ஒன்றிய கவுன்சிலர், ஒரு ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தின் 4-ம் வார்டில் திமுக வேட்பாளர் உத்தமன் 1,249 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சாமிநாதன் 764 வாக்குகள் பெற்றார். ஒன்றியத்தின் 11-ம் வார்டில் திமுக வேட்பாளர் பாரதி 1,705 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் லினிஸ் 591 வாக்குகள் பெற்றார். கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நடுஹட்டி ஊராட்சியின் 6-வது வார்டில் நதியா வெற்றி பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x