

எடப்பாடி அருகே நிதி நிறுவன அதிபர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அவரது மனைவியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி அடுத்த தேவூர் புள்ளாக்கவுண்டம்பட்டி 4-வது வார்டு பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர் தயானந்த் (30). இவரது மனைவி அன்னபிரியா (21). இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை குடும்ப பிரச்சினை தொடர்பாக தம்பதிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, தயானந்த் ரத்த காயம் அடைந்து மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற தேவூர் போலீஸார், தயானந்த் உடலை கைப்பற்றி விசாரணைநடத்தினர். மேலும், அன்னபிரியாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தயானந்த்துக்கு வலிப்பு ஏற்பட்டு மரக்கட்டையில் மோதி உயிரிழந்ததாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக தயானந்த் தாய் கஸ்தூரி (48) தேவூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார் புகாரில்,‘எனது மகனிடம் ரூ.40 லட்சம் பணம் இருந்தது. இதனை மருமகள் அன்னபிரியா கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.தகராறில் எனது மகனை, மருமகள் அடித்துக் கொலை செய்திருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சங்ககிரி டிஎஸ்பி நல்லசிவம் தலைமையிலான போலீஸார் தொடர்ந்து அன்னபிரியாவிடம் விசாரித்து வருகின்றனர்.