

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் கருவறையை சுற்றியுள்ள பிரகாரத்தில் நடைபெற்று வரும் கல்பதிக்கும் திருப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கருவறைக்குள் கிரானைட் கற்கள் பதிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. மேலும், கருவறை பிரகாரம் மற்றும் முருகன், விநாயகர், அம்மன் சன்னதிகளை சுற்றியுள்ள பிரகாரங்களில் கருங்கற்கள் பதிக்கும் பணி தொடங்கியது. இந்நிலையில், கரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக பல மாதங்கள் கருங்கற்கள் பதிக்கும் பணி நிறுத்தப்பட்டன.
தற்போது, ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு வழக்கமான பணிகள் நடந்து வரும் நிலையில், மீண்டும் கருங்கற்கள்பதிக்கும் பணி நடந்து வருகிறது. மிகவும் மெதுவாக இப்பணி நடந்து வரும் நிலையில், பக்தர்கள் மேடு பள்ளங்களான பிரகாரத்தை சுற்றி வந்து வழிபாடு நடத்த சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, பிரகாரத்தில் நடைபெற்று வரும் திருப்பணியை விரைந்த முடிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.