Published : 07 Oct 2021 03:13 AM
Last Updated : 07 Oct 2021 03:13 AM

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : ரசாயன நுரையுடன் வரும் நீரை சுத்திகரிக்க கோரிக்கை

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 328 கனஅடியிலிருந்து 707 கனஅடியாக அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்று நீரில் வெண்மையான ரசாயன நுரை கலந்து வருவதால், நீரை சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நந்திமலை, பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 328 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 707 கனஅடியானது.

இதனால் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 328 கனஅடியில் இருந்து 640 கனஅடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி. தற்போதைய அணையின் நீர் மட்டம் 41.82 அடியாக உள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் பெங்களூரு நகரப்பகுதி தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் கலந்து வெண்நுரையுடன் கூடிய ஆற்றுநீர் கெலவரப்பள்ளி அணைக்கு வந்து சேருகிறது. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தென்பெண்ணை ஆற்று நீரை சுத்திகரிப்பு செய்ய இருமாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x