நாட்டுக்கோழி, ஈமு கோழி வளர்ப்புத் திட்டத்தில் - ரூ.1.38 கோடி மோசடி செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை :

நாட்டுக்கோழி, ஈமு கோழி வளர்ப்புத் திட்டத்தில் -  ரூ.1.38 கோடி மோசடி செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை :
Updated on
1 min read

நாட்டுக்கோழி, ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தில் ரூ.1.38 கோடி மோசடி செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவையில் உள்ள முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் காசிலிங்க கவுண்டன்புதூரைச் சேர்ந்தபாஸ்கரன் (36), கம்பளியம்பட்டியைச் சேர்ந்த சேகர் (39), குமார் (48) ஆகிய மூவரும் இணைந்து, பெருந்துறை அருகே சரளையில் ‘பாஸ் பவுல்ட்ரி ஃபார்ம்ஸ்’ என்ற பெயரில் நாட்டுக்கோழி, ஈமு கோழி நிறுவனத்தை 2011 டிசம்பரில் தொடங்கினர். பின்னர், நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகளவில் சம்பாதிக்கலாம் என கவர்ச்சிகரமான இரண்டு திட்டங்களை அறிவித்தனர். இதை நம்பி, 98 பேர் ரூ.1.38 கோடி முதலீடு செய்தனர். ஆனால், திட்டத்தில் தெரிவித்தபடி பணத்தை திருப்பி அளிக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் 2012-ம் ஆண்டு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ரவி, நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான சேகருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.76 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட குமார் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட மற்றொரு உரிமையாளரான பாஸ்கரன் என்பவர் மீதான வழக்கு தனி வழக்காக பிரிக்கப்பட்டுள்ளது. தலைமைறைவாக உள்ள பாஸ்கரனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in