Published : 07 Oct 2021 03:15 AM
Last Updated : 07 Oct 2021 03:15 AM

ஜவ்வரிசியில் கலப்படம் செய்யப்படுகிறதா?. - பாக்கெட்டுகளை வாங்கி வந்து அதிகாரிகளிடம் கொடுத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு :

ஜவ்வரிசியில் கலப்படம் செய்யப்படுகிறதா என்பது குறித்து 3 பாக்கெட்டுகளை கடைகளில் வாங்கிவந்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கொடுத்து, ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜவ்வரிசிஉற்பத்திக்கான மூலப்பொருட்களான மரவள்ளிக்கிழங்கு சேலம், ஈரோடு. தருமபுரி, நாமக்கல் பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஜவ்வரிசியில் பல்வேறு வேதி்ப் பொருட்களை கலப்படம் செய்து, விற்பனை செய்து வருவதால் மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் குறைந்து, இயற்கையாகஜவ்வரிசி உற்பத்தி செய்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜவ்வரிசியில் வேதிப் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க உணவுப் பாதுகாப்புத்துறைக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ஈரப்பதத்துடன் இருக்கும் மரவள்ளி கிழங்கு மூலமாகவே வேதிப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு, கலப்படம் செய்யப்படுவதாகக்கூறி அதிகாரிகள் ஆலைகளுக்கு சீல்வைத்தனர். எனவே இதுதொடர்பாக உணவுப்பாதுகாப்புத்துறை பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கலப்படத்தை தடுக்க ஜவ்வரிசி மாதிரிகள் ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 9 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

அப்போது கடைகளில் விற்கப்பட்ட 3 வகையான ஜவ்வரிசி பாக்கெட்டுகளை வாங்கி நீதிமன்றத்துக்கு கொண்டு வந்த நீதிபதி, அந்த பாக்கெட்டுகளை கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி அதில் கலப்படம் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உணவுப் பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை இன்று (7-ம் தேதி) தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x