

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளின் வாகனங்கள் திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று ஆய்வு செய்யப்பட்டன. இப்பணியை ஆய்வு செய்த ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், பின்னர் கூறியது:
திருவாரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி வாகனங்கள் தற்போது சோதனையிடப்பட்டன. இச்சோதனையில், பள்ளி வாகனங்களில் அவசரகால வெளியேறும் வசதி, குழந்தைகள் எளிதாக ஏற தாழ்வான படிக்கட்டுகள், பள்ளி வாகனம் என்ற அறிவிப்பு, வேகக் கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு, அரசு வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள் கவனமாக இருந்து, பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். பள்ளி வாகனங்களில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால், உடனடியாக பள்ளி நிர்வாகத்துக்கு வாகன ஓட்டுநர்கள் எழுத்துப்பூர்வமாக தெரியப்படுத்த வேண்டும். உரிய நடவடிக்கைகள் மூலம் இக்கல்வியாண்டு விபத்தில்லா ஆண்டாக அமைய வேண்டும் என்றார்.
ஆய்வின்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பண்ணன், சண்முகவேல் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி வாகன ஓட்டுநர்கள் உடனிருந்தனர்.