Published : 07 Oct 2021 03:15 AM
Last Updated : 07 Oct 2021 03:15 AM

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோயில் - பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் நடைபெறும் : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் நடைபெறும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடத்தப்படும் நிலையில், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்தாண்டும், நடப்பாண்டிலும் பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை.

பிரம்மோற்சவம் என்பது ஆகம விதிகளின்படி கண்டிப்பாக நடைபெற வேண்டிய உற்சவம். எனவே கோயில், மதம் சார்ந்த விவகாரங்களில் தலையிட அரசுக்கு தடை விதிக்க வேண்டும்.

ஆகமவிதிகளில் கூறியுள்ளபடி எதிர்காலத்தில் உற்சவங்களை குறித்த காலத்தில் முறையாக நடத்த வைணவ சமயத்தைச் சேர்ந்த ஜீயர்கள், ஸ்தலத்தார்கள் உள்ளிட்டோர் அடங்கிய உற்சவ குழுவை அமைத்து பிரம்மோற்சவத்தை சிறப்பாக நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், சவுரிராஜப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா வரும் நவ.10 முதல் நவ.19 வரை நடத்தப்படும் என்றும், பிரம்மோற்சவ விழாவுக்காக பல சபாக்கள் நன்கொடை வசூலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில், வெளியூர்களிலிருந்து விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு உணவளிப்பதற்காகவே நன்கொடை வசூலிப்பதாகவும், அதில் சட்டவிரோத செயல்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், சட்டவிரோதமாக நன்கொடை வசூலிக்கப்படுவது கண்டறியப்பட்டால் நீதிமன்றம் தலையிட நேரிடும் எனக்கூறி, வழக்கு விசாரணையை அக்டோபர் கடைசி வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x