Published : 07 Oct 2021 03:16 AM
Last Updated : 07 Oct 2021 03:16 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்களிக்கும் நேரம் மாலை 5.45 மணிக்கே முடிந்து விட்டதாக வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறியதை கண்டித்து 5 இடங்களில் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதைத்தொடர்ந்து, அங்கு வந்த காவல் துறையினர் தடியடி நடத்தி விரட்டியடித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை மற்றும் கந்திலி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதற் கட்ட தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தேர்தலையொட்டி 4 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 942 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டிருந்தன. இதில், 163 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அனைத்து நிகழ்வுகளையும் நேரிடையாக கண்காணிக் கும் வகையில் சிசிடிவி கேமராக்கள், வீடியோகிராபர்கள் என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வாக்குப்பதிவு தொடக்கம் மந்தமாகவே இருந்தது. பெரும் பாலான வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிக அளவில் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
தேர்தல் பாதுகாப்பு பணியில் மொத்தம் 1,694 காவலர்கள் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவல் துறையினர் 4 ஊராட்சி ஒன்றியங்களில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர் கூட்டம் குறைவாக இருந்தது. காலை 9 மணி நிலவரப்படி 8.16 சதவீதம், காலை 11 மணி நிலவரப்படி 13.70 சதவீதம் வாக்குப்பதிவாகியிருந்தன.
நண்பகல் 1 மணிக்கு 25.05 சதவீதமும், மாலை 3 மணிக்கு 41.24 சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி 57.5 சதவீதம் என வாக்குப்பதிவானது.
மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் மாலை 3 மணிக்கு மேல் ஒவ்வொரு வாக்குச்சாவடியில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
மாலை 5.45 மணிக்கு மேலே வாக்களிக்க வந்தவர்கள் வாக்களிக்க முடியாது என வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறியதால் வாக்காளர்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பல்வேறு இடங்களில் முற்றுகைப்போராட்டம், சாலை மறியல் நடைபெற்றது.
ஜோலார்பேட்டை ஒன்றியத் துக்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி அசோக்நகர் வாக்குச்சாவடியில் மாலை 5 மணிக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதன் பிறகு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கவில்லை. இந்நிலையில், நேற்று மாலை திடீரென 5.45 மணிக்கு வாக்குச்சாவடி கதவுகள் மூடப்பட்டன. அப்போது வாக்களிக்க ஆர்வமாக வெளியில் காத்திருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால், அதிருப்தி அடைந்த 500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
அதேபோல, வெங்களாபுரம் ஊராட்சி, புத்தாகரம் ஊராட்சி, அத்தனாவூர், ஊராட்சி, பா.முத்தம் பட்டி ஆகிய பகுதிகளில் வாக்குச்சாவடிகள் மாலை 5.45 மணிக்கே மூடப்பட்டன. இதனால் அதிருப்தியடைந்த வாக்காளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, வாக்குப்பெட்டிகள் ‘சீல்' வைக்கப்பட்டு அந்தந்த ஒன்றியங்களில் அமைக்கப் பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங் களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 62 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
வாக்கு எண்ணிக்கை வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளதால் அதுவரை வாக்கு எண்ணும் மையங்களுக்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் அங்கு தீவிர பாதுகாப்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT