

தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் நேற்றுகடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையை ஒட்டிய கடற்பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால், `தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும்’ என்று, சென்னை வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், கன்னியாகுமரி, நெல்லை,தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடியகன மழை முதல் மிக கனமழையும் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் மணிக்கு சுமார் 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன் வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதன்படி, நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் 350 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.