

விருதுநகரில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மேல் சட்டை அணியாமல் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திர ராஜா உட்பட சில விவசாயிகள் மேல் சட்டை அணியாமல் பங்கேற்றனர். ராமச்சந்திர ராஜா பேசுகையில், தரணி சர்க்கரை ஆலை 2018-19-ல் விவசாயிகளுக்கு ரூ.10 கோடி வழங்க வேண்டி உள்ளது. இத்தொகையைப் பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் விஜயமுருகன் பேசுகையில், வில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் காட்டு மாடுகள் மேய்ச்சலுக்கு வனத் துறையினர் அனுமதி மறுக்கின்றனர். இதனால் விவசாயிகள், கால் நடை வளர்ப்போர் பாதிக்கப் பட்டுள்ளனர் என்றார்.
தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாராயணசாமி பேசுகையில், கண்மாயில் இருந்து வயலுக்காக மண் எடுத்தால் வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர். அதேநேரம், செம்மண் திருடும் தனியார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் உத்தண்டராமன் உட்பட வேளாண் அலுவலர்கள், பொதுப்பணித் துறை அலுவலர் கள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.