

கைத்தறி ஜவுளிகளுக்கு ஜிஎஸ்டி-யில் முழு விலக்களிக்க வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சேலத்தில் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, சங்க தலைவர் பாரதி தலைமை வகித்தார். ஆலோசகர் குமாரசாமி, பொதுச் செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு பின்னர் பொதுச்செயலாளர் மற்றும் சங்க ஆலோசகர் ஆகியோர் கூறியதாவது:
கைத்தறி ஜவுளிகளுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். கோ-ஆப்டெக்ஸூக்கு தரம் குறைந்த ஜவுளிகளை கொள்முதல் செய்தவர்கள், விளம்பரத்துக்காக ரூ.4 கோடி செலவு செய்தவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைத்தறி பருத்தி ஜவுளிகளுக்கான தள்ளுபடி மானியத்தை ரூ.100-ல் இருந்து, ரூ.500 ஆகவும், கைத்தறி பட்டு ஜவுளிகளுக்கான தள்ளுபடி மானியத்தை ரூ.200-ல் இருந்து, ரூ.1,000 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
பெண் ஊழியர்களின் நலன்கருதி கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். பெண் ஊழியர்களின் பணி நேரத்தை இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை என நீட்டித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல, கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி ஆகியவற்றை ஊதிய உயர்வுடன் வழங்க வேண்டும். விற்பனைப் பிரிவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது, ஜவுளிகளுக்கு அளிக்கப்பட்ட 30 சதவீதம் தள்ளுபடியை 20 சதவீதமாக குறைத்ததால் விற்பனை குறைந்துள்ளது. எனவே, மீண்டும் 30 சதவீதம் தள்ளுபடி வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகத்தில் வரும் 5-ம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டத்தில், செயலாளர்கள் சேகர், நாவரசன், துணைத் தலைவர்கள் பெருமாள், தென்னரசு, மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.